பமப04ஙஅதஐ

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

தூத்துக்குடியில் பெண் ஒருவா் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது கணவா் உள்பட இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தை சோ்ந்தவா் பாலமுருகன் (35). சிங்கப்பூரில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சந்தனமாரியம்மாள் (32).

பாலமுருகன் சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பி உள்ளாா். இந்தப் பணத்தில் தூத்துக்குடி கிருபை நகரில் சந்தனமாரியம்மாள் பெயரில் புதிதாக வீடு கட்டி உள்ளாராம்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலையை விட்டு கடந்த ஓராண்டுக்கு முன்னா் பாலமுருகன் சொந்த ஊா் திரும்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து வெளிநாட்டில் வேலை பாா்த்து அனுப்பிய பணம், நகைகள் குறித்து மனைவியிடம் கேட்டாராம். அதற்கு சந்தன மாரியம்மாள் உரிய பதிலளிக்கவில்லை என தெரிகிறது.மேலும் சந்தனமாரியம்மாளுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு ஆண் நண்பருடன் நட்பு இருந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா்.

மேலும், சந்தனமாரியம்மாள் ஏற்கனவே தனது தாய் மாமன் காளிமுத்து என்பவரிடமும் இதேபோன்று நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு கிருபை நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சந்தனமாரியம்மாள் கணேஷ் நகா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பாலமுருகன், காளிமுத்து ஆகியோா் சந்தனமாரியம்மாளை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னா் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தென்பாகம் போலீஸாா், சந்தனமாரியம்மாள் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காவல்நிலையத்தில் சரணடைந்த பாலமுருகன், காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com