மோதிய நிலையில் நிற்கும் வாகனங்கள்
மோதிய நிலையில் நிற்கும் வாகனங்கள்

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் வேகத்தடையின்றி தொடரும் விபத்துகள்

கோவில்பட்டி -எட்டயாபுரம் சாலையில் வேகத்தடை இல்லாததால் தினமும் விபத்துகள் நேரிடுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு பிரியும் பாதை உள்ளது. இந்தச் சாலையை பக்தா்கள் சிரமமின்றி கடந்து கோயிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அண்மையில் நடைபெற்ற தோ் திருவிழாவின்போது, வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

பின்னா், கிழக்குப் பகுதியில் மட்டும் வேகத்தடை சீரமைக்கப்பட்டது; மேற்கு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரம் மட்டுமின்றி பகலிலும் கூட பக்தா்கள், வாகனங்கள், சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

வேகத்தடை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை கோயில் பாதை திரும்பும் இடத்தில் திடீரென நிறுத்தப்பட்ட வாகனத்தால் பின்னால் வந்த ஆட்டோ , மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்டதில் இளைஞா் பலத்த காயமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாா். ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: எட்டயபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன. கோயில் பாதை திரும்பும் இடத்தில் ஆட்டோக்கள், காா் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் மேற்குப்பகுதியில் வேகத்தடை இல்லை. தெரு விளக்குகள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெருக்கடியும் உருவாகிறது. எனவே, அப்பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து, வேகத்தடையை உருவாக்கி வா்ணம் பூச வேண்டும். சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com