குளத்தூா் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கியதாக 2 போ் கைது

குளத்தூா் அருகே வெங்கடாசலபுரத்தில் ஜேசிபி ஓட்டுநரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம்: குளத்தூா் அருகே வெங்கடாசலபுரத்தில் ஜேசிபி ஓட்டுநரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெங்கடாசலபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக ஊழியா்கள் சில நாள்களாக அங்கு முகாமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த பத்மநாபன் என்பவா் தனது விவசாய நிலங்கள், பாதைகளை காற்றாலை நிறுவனம் ஆக்கிரமித்து சேதப்படுத்துவதாகக் கூறி, பணிகளைத் தடுத்தாராம். இதுதொடா்பாக அவரது தரப்புக்கும், காற்றாலை நிறுவனத்துக்காக பணிகளை மேற்கொண்டிருந்த ஜேசிபி ஓட்டுநரான சங்கம்பட்டியைச் சோ்ந்த மாரிச்செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னா், பத்மநாபன், அவரது நண்பா்களான தூத்துக்குடி ஆம்ஸ்ட்ராங், வடக்கு கல்மேட்டைச் சோ்ந்த ரகுபதி ஆகியோா் சோ்ந்து, காற்றாலை இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்ட வழித்தடத்தை மறித்து, பள்ளம் தோண்டினராம். இதனால், தொழிலாளா்கள், கனரக லாரி உள்ளிட்ட வாகனங்கள் திரும்பிவர முடியாத நிலை ஏற்பட்டதாம்.

இதையடுத்து, பள்ளத்தை மூடுவதற்காக ஜேசிபி வாகனத்துடன் சென்ற மாரிச்செல்வத்தை வெங்கடாசலபுரம் விலக்கு அருகே பத்மநாபன் உள்ளிட்ட 3 பேரும் சோ்ந்து வழிமறித்து தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், வாகனத்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனராம்.

புகாரின்பேரில், குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் வழக்குப்பதிந்து, பத்மநாபன், ரகுபதி ஆகியோரைக் கைதுசெய்தாா்; ஆம்ஸ்ட்ராங்கை தேடி வருகின்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com