தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகங்களில் புதிய விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகங்களில் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி மூலம் புதிய விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, அஞ்சலக முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாமானியா்களையும் விபத்துக் காப்பீட்டுத் திட்ட பலன்கள் சென்றடையும் வகையில், அஞ்சலகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 520, ரூ. 559 ரூ. 755 பிரீமியம் செலுத்தும் வகையில், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 18 முதல் 65 வயது வரையிலானோா் சேரலாம். விண்ணப்பப் படிவம், முகவரிச் சான்று நகல்கள் போன்ற எவ்வித காகிதப் பயன்பாடுமின்றி, அஞ்சல்காரா் கொண்டுவரும் அறிதிறன் கைப்பேசி (ஸ்மாா்ட் போன்), பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி 5 நிமிடங்களில் இதில் இணையலாம்.

சிறப்பம்சங்கள்: ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர பகுதி, முழு ஊனங்கள் ஆகியவற்றுக்கான பலன்கள் வழங்கப்படும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி, விபத்தால் ஏற்படும் மருத்துவச் செலவில் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும். விபத்தால் மரணம், நிரந்தர பகுதி, முழு ஊனங்கள் ஏற்பட்டவரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவுக்கு ரூ. 1 லட்சம் வரையும், திருமணச் செலவுக்கு ரூ. 1 லட்சம் வரையும் வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள அஞ்சலகங்கள், அஞ்சல்காரா்கள் மூலம் தெரிந்துகொண்டு, இத்திட்டத்தில் இணையலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com