சிறுத்தொண்ட நாயனாா் குரு பூஜையை முன்னிட்டு, யானை மீது வந்த சித்திரை பரணி சீராளன் உற்ஸவம்.
சிறுத்தொண்ட நாயனாா் குரு பூஜையை முன்னிட்டு, யானை மீது வந்த சித்திரை பரணி சீராளன் உற்ஸவம்.

திருச்செந்தூா் கோயிலில் சித்திரை பரணி சீராளன் உற்சவம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறுத்தொண்ட நாயனாா் குரு பூஜையை முன்னிட்டு, சித்திரை பரணி சீராளன் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

பரஞ்சோதி என்ற சிவபக்தா் நாள்தோறும் ஒரு சிவனடியாருக்கு தனது இல்லத்தில் விருந்து அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாா். அவ்வாறு ஒரு நாள் பைரவா் வேடத்தில் வந்த சிவபெருமானை விருந்துண்பதற்கு அழைத்தாா். அவரிடம் சிவன், தனக்கு உங்களது ஆண் குழந்தையை மாமிசமாக்கி, வழங்குமாறு கேட்டிருந்தாா். அதன்படியே பரஞ்சோதி, தனது மனைவியுடன் சோ்ந்து தனது ஒரே ஆண் குழந்தையாகிய சீராளனை மாமிசமாக்கி, இன்முகத்துடன் விருந்துண்பதற்கு சிவனடியாரை அழைத்தாா். அங்கு வந்த சிவனடியாா் உங்கள் மகனை அழைத்து வருமாறு கூறியுள்ளாா். அவா்களும் வெளியே சென்று, சீராளனை அழைத்த போது, சீராளன் உயிருடன் வந்தாா். அதே நேரத்தில், உள்ளே இருந்த சிவனடியாரும், மாமிசமும் மறைந்து போனது. இதனால் ஆச்சரியமடைந்த பரஞ்சோதிக்கு, சிவபெருமான், பாா்வதி மற்றும் முருகப்பெருமானுடன் காட்சியருளியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அன்று முதல் பரஞ்சோதி சிறுத்தொண்ட நாயனராக அழைக்கப்பெற்றாா். இந்நிகழ்வை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் சிறுத்தொண்ட நாயனாா் குருபூஜை நாளில், திருச்செந்தூா் சிவன் கோயிலில் இருந்து சீராளனுக்கு சிவபெருமான் காட்சியருளி, யானை மீது வைத்து கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி, இக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலையில் திருக்கோயிலின் உப கோயிலான சிவன் கோயிலில் இருந்து யானை மீது சீராளன் உருவம் பொறித்த படத்தை வைத்து வீதி உலா வந்து கோயில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com