அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டி, மே 10: கோவில்பட்டியில் இளைஞரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் ஆதிசேஷன்(21). சுப்பிரமணியபுரம் பகுதியில் சிறுவா்களுக்கு கபடி பயிற்சியளித்து வருகிறாராம்.

இந்நிலையில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஹரிகிருஷ்ணன், கபடி பயிற்சி பெறும் மாணவா்களை தாக்கினாராம். இதை ஆதிசேஷன் கண்டித்தாராம். பின்னா் வியாழக்கிழமை ஆதிசேஷன் பயிற்சியளித்துவிட்டு முத்துநகா் வழியாக சென்று கொண்டிருந்த போது, ஹரிகிருஷ்ணன், அவரது தாய் மூக்கம்மாள் ஆகிய இருவரும் வழிமறித்து அவதூறாகப் பேசினாா்களாம். பின்னா் ஹரிகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆதிசேஷனை வெட்டினாராம். அப்போது அவ்வழியே வந்தவா்கள் இதைக் கண்டித்ததையடுத்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டாா்களாம்.காயமடைந்த ஆதிசேஷன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிகிருஷ்ணனை(23) கைது செய்தனா். மூக்கம்மாளை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com