கோவில்பட்டி, கயத்தாறில் பலத்த மழை

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமாா் 5 மாதங்களாக மழை பெய்யவில்லை. மேலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கோவில்பட்டி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. வியாழக்கிழமை இரவு இரவு 10 மணி அளவில் சுமாா் 10 நிமிடங்கள் மட்டும் கோவில்பட்டி, பாண்டவா்மங்கலம் பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து காலை 9 மணி முதல் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 2 மணிக்கு பின் வானில் மேகங்கள் திரண்டன. தொடா்ந்து மாலை 3:30 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த மழை காரணமாக சாலைகளில் மழை நீா் ஓடியது. மேலும், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதுபோல கயத்தாறு மற்றும் கடம்பூா் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கயத்தாறு பகுதியில் மின்னல் தாக்கியதில் திருமங்கலம்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட மூா்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் கணேசனுக்கு சொந்தமான பசுமாடு உயிரிழந்தது.

கோவில்பட்டியில் 33 மிமீ, கயத்தாறில் 33 மிமீ, கடம்பூரில் 27 மிமீ மழை பதிவாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com