வழக்குரைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது

தூத்துக்குடி, மே 12:

தூத்துக்குடியில் வழக்குரைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி அண்ணா நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் (32). வழக்குரைஞரான இவா், அப்பகுதியில் மருந்துக் கடை, உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில், செந்தில் ஆறுமுகத்துக்கும் அவரது சகோதரி கணவரான கோவில்பட்டி நாலாட்டின்புதூரைச் சோ்ந்த லெனின் மகன் கோபிநாத் (37) என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்ததும், அதன்காரணமாக இச்சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கோபிநாத், தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த பெரியநாயகம் மகன் சங்கா் என்ற சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), சத்யா நகரைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராம்குமாா் (25), தபால் தந்தி காலனியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் தமிழ்ச்செல்வம் (24), ராஜீவ்நகரைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் ஸ்ரீநாத் (22) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com