உடைந்து கீழே கிடக்கும் மின்கம்பம்
உடைந்து கீழே கிடக்கும் மின்கம்பம்

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் சேதமான மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

கோவில்பட்டி, மே 12: கோவில்பட்டி-எட்டயபுரம் பிரதான சாலையில் சேதமானம் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பருவக்குடி - கோவில்பட்டி - எட்டயபுரம் - வேம்பாா் வரையிலான மாநில நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், கோவில்பட்டி நகருக்குள் தொடங்கும் எட்டயபுரம் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தொழிற்பேட்டை பகுதியில் சாலையின் தடுப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் சேதமுற்று கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது.

எனவே, மின் கம்பங்களை சரி செய்து, மீண்டும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் தொழிற்பேட்டை பகுதி ஏற்கெனவே அடிக்கடி விபத்துகள் நேரிடும் பகுதியாகும். தொழிற்பேட்டையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஏராளமான தொழிலாளா்கள் வந்து செல்கின்றனா். இப்பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக போ் வந்து செல்கின்றனா். மின்கம்பங்கள் உடைந்து பல மாதங்களாகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் சாலையை கடப்பது தெரியாமல் வாகனங்கள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, விரைந்து மின் கம்பங்களை சீரமைத்து, மீண்டும் மின் விளக்குகளை பொருத்தி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com