தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இங்கு சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனிடையே, காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடியில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் அதிகாலைமுதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் வெகுவாகத் தணிந்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரில், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊா்ந்து சென்றன. உப்பளங்களில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 59.30 மி.மீ. மழை பெய்தது. சூரங்குடியில் 21 மி.மீ., கீழஅரசரடியில் 20 மி.மீ., வேடநத்தத்தில் 10 மி.மீ., மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பதிவானது.

மழைநீா் அகற்றும் பணி: மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். லூா்தம்மாள்புரத்தில் நடைபெற்ற பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு, துரிதப்படுத்தினாா். ஆணையா் லி. மதுபாலன், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி பகுதியில்...: கோவில்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த காற்று, இடி- மின்னலுடன் மழை பெய்தது. பின்னா், சாரல் மழை தொடா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com