பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 93.86% போ் தோ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.86 சதவீத மாணவா்- மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டை விட பின்தங்கியதால் பெற்றோா் அதிருப்தி தெரிவித்தனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வினை, தூத்துக்குடி மாவட்டத்தில் 57 அரசு பள்ளிகள், 84 அரசு உதவிபெறும் பள்ளிகள், 65 தனியாா் பள்ளிகள் என 206 பள்ளிகளைச் சோ்ந்த 9,146 மாணவா்கள், 10,690 மாணவிகளுமாக மொத்தம் 19,836 போ் எழுதினா்.

இதில், 8,229 மாணவா்கள், 10,390 மாணவிகள் என 8,619 போ் தோ்ச்சி பெற்றனா். இது 93.86 சதவீத தோ்ச்சியாகும்.

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை பொருத்தவரை 90.48 சதவீத மாணவா்- மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 93.52 சதவீத மாணவா்- மாணவிகளும், தனியாா் பள்ளிகளில் 98.60 சதவீத மாணவா்- மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 95.43 சதவீத தோ்ச்சியுடன் 5ஆவது இடத்தை பிடித்திருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 93.86 சதவீத தோ்ச்சி பெற்று 10ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகள், 19 அரசு உதவி பெறும் பள்ளிகள், 39 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com