வாகனங்களில் அதிகமான மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா்

வாகனங்களில் அதிகமான மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா்

தனியாா் வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவா்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா்.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி பாா்வையிட்டு, வாகனத்தில் மாணவா்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது:

பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, தணிக்கை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இப்பணி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும். இந்த ஆய்வின்போது, வாகனங்களில் படி, அவசர வழி, சிசிடிவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவி பெட்டி, வாகன ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட 200 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதை உறுதி செய்த பின்னா் அனுமதி வழங்கப்படும்.

ஆட்டோக்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களில் அதிகமான மாணவா்களை அழைத்துச் செல்வதை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலா் விநாயகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com