வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா். இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

வைகாசி மாதப் பிறப்பையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலைமுதலே கடற்கரையிலும், நாழிக்கிணறிலும் நீண்ட வரிசையிலும் நின்று புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனா்.

மே 22இல் வைகாசி விசாகம்: முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா 10 நாள் வசந்த திருவிழாவாக கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதல், மாலையில் அபிஷேகம், அலங்கார, தீபாராதனைக்குப் பின்னா், கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து கோயில் சோ்தல் நடைபெறுகிறது.

வைகாசி விசாக நாளான 22ஆம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது. அதையடுத்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதல், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தல் ஆகியவை நடைபெறும். மகா தீபாராதனைக்குப் பின்னா், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தேவசேனா அம்மனுடன் கிரிவீதி வலம் வந்து கோயில் சோ்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com