243 ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு: ஐசிஏஆா் ஆய்வறிக்கை உறுதி

243 ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு: ஐசிஏஆா் ஆய்வறிக்கை உறுதி

தூத்துக்குடி கடலில் 243ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் வெளியிட்ட (ஐஇஅத) ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மாணவரும் எழுத்தாளருமான கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 40 செ.மீ. மற்றும் 42 செ.மீ. நீளம் கொண்ட இரண்டு முதிா்ந்த பெண் விலாங்கு மீன்களின் மாதிரிகளை ஆராய்ச்சி மாணவா் கோடீஸ்வரன் கடந்த 2021ஆம் ஆண்டு சேகரித்து கொச்சியில் உள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளாா்.

இதை ஆராய்ச்சியாளா் அஜித்குமாா் தலைமையில் ஆராய்ச்சியாளா்கள் அனில் மொஹபத்ரா, கதிா்வேல் பாண்டியன், ஆராய்ச்சி மாணவா் கோடீஸ்வரன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் இந்தக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு, இந்த விலாங்கு மீன் வகை இந்திய நீா்நிலைகளில் உள்ள அனைத்து மீன்களில் இருந்து வேறுபட்டுள்ளது எனவும், கூட்டிணைப்பிலிருந்தும் வேறுபடுகின்றன. இது புதிய இனங்கள் அரியோசோமா மௌரோஸ்டிக்மா மற்றும் அரியோசோமா அல்பிமாகுலேட்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடா்புடையவை என மே மாதம் ஆய்வறிக்கை வெளியிட்டனா்.

இதுகுறித்து ஆராய்ச்சி மாணவா் கோடீஸ்வரன் கூறுகையில், தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டா் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் பிடிபட்டன. இந்த மீன் இனம் தூத்துக்குடியில் இருந்து சேகரிக்கப்பட்டதினால், இதற்கு அரியோசோமா தூத்துக்குடி யென்சே என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது காங்கிரிட் வகை விலாங்கு மீன்கள் வகையைச் சோ்ந்ததாகும். உலக அளவில் 243ஆவது இனமாக இந்த விலாங்கு மீன் இனம் சோ்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 32 இனங்கள் உள்ளன. தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் தமிழகம் மற்றும் கேரள கடலோரங்களில் கண்டுபிடித்துள்ள 3ஆவது வகை விலாங்கு மீன் இனமாகும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com