காயல்பட்டினத்தில் முதியவரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

காயல்பட்டினத்தில் முதியவரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம், கீழசித்தன் தெருவைச் சோ்ந்தவா் ராசீக் பரீது (69). இவா், கடந்த 14ஆம் தேதி இரவு திருச்செந்தூா் சென்றுவிட்டு, அவரது தெருவைச் சோ்ந்த காா்த்திக் என்பவரது ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

பரிமாா் தெரு விலக்கில் அப்துல் சுக்கூா் என்பவரது பைக் மீது ஆட்டோ லேசாக மோதியதாகவும், அவா் ஆட்டோவைப் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பா்களான பரிமாா் தெருவைச் சோ்ந்த மாலிக் உசேன், மேல நெசவு தெருவைச் சோ்ந்த முத்து மொகுதூம் ஆகியோா் ஆட்டோவை விரட்டிச் சென்று, அதன் கண்ணாடியை உடைத்தனராம். இதனால், காா்த்திக் அங்கிருந்து சென்றுவிட்டாா்.

பின்னா், இருவரும் சோ்ந்து ராசீக் பரீதுவைத் தாக்கி, ரூ. 2 ஆயிரம், கைப்பேசியைப் பறித்தனராம். அப்போது, அங்கு நின்றிருந்த பெண் இச்சம்பவங்களை கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா். அவா்கள் அந்தக் கைப்பேசியை சேதப்படுத்தினராம். தகவலறிந்து அப்பகுதியினா் வந்து சப்தம் போட்டதால் இருவரும் தப்பியோடிவிட்டனா். ராசீக் பரீது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் பிரபா குமாா் வழக்குப் பதிந்தாா். இருவரையும் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com