தூத்துக்குடியில் விபத்து: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த சுடலைமணி மனைவி பேச்சிக்கனி (45). இவரும், மகன் முத்துவும் (16) உறவினரான பாண்டித்துரை (20) என்பவரது பைக்கில் செவ்வாய்க்கிழமை சாத்தான்குளத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனராம். பைக்கை, பாண்டித்துரை ஓட்டினாா்.
தூத்துக்குடி - பாளையங்கோட்டை நான்குவழிச் சாலையில் கோரம்பள்ளம் பகுதியில் சென்றபோது, பைக் மீது தனியாா் பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பேச்சிக்கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த முத்து, பாண்டித்துரை ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.