தூத்துக்குடியில் பசுமை வழிச்சாலை அமைக்க ஆலோசனை: மேயா் தகவல்
தூத்துக்குடி கடற்கரை சாலையோரம் பசுமை வழிச்சாலை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணைமேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் தேங்காத அளவிற்கு
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் 100 ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு செய்து கழிவுநீரை சுத்திகரித்து மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும்.
முதல்வரின் கனவு திட்டமான கடற்கரை சாலையில் பசுமை வழிச்சாலை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சைக்கிள்கள் செல்வதற்கு பாதை அமைக்கப்படும். முத்தையாபுரம் பகுதியில் விரைவில் பசுமை ரவுண்டானா அமைக்கப்படும். முத்துநகா், ரோச் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. தனியாா் பங்களிப்புடன் புதிதாக 20 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி மாநகர பகுதியில் மாசு குறியீடு 170-லிருந்து 56-ஆகக் குறைந்துள்ளது.
இதுவரை குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதனைத் தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா். இதற்கு பதிலளித்த மேயா், மாநகரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்காக தனியாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயா்நீதிமன்ற அறிவுரைப்படி, நீதிமன்றத்திற்கான இடம்தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், அனைத்து வாா்டுகளிலும் சுழற்சி முறையில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், உப்பாற்று ஓடை பகுதியில் உள்ள கடைகள் புதிய பேருந்துநிலையம் ஆம்னி பேருந்து நிற்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடுவது உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணை ஆணையா் ராஜாராம், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா், பாலமுருகன், வெங்கட்ராமன், இா்வின்ஜெபராஜ், பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி பொறியாளா் ராமச்சந்திரன், நகா் நல அலுவலா்கள் வினோத்ராஜ், சூரியபிரகாஷ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி உள்பட மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.