லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவா்கள் 10 போ் விடுவிப்பு
லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்கள் 10 பேரை இந்திய கடலோரக் காவல்படை வெள்ளிக்கிழமை விடுவித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து முத்துப்பாண்டி உள்ளிட்ட 10 மீனவா்கள் விசைப்படகில் தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு கடந்த 16ஆம் தேதி சென்றனா். லட்சத்தீவு அருகே உள்ள தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இவா்களை கடலோர காவல் படையினா் கடந்த 23ஆம் தேதி கைது செய்து, லட்சத்தீவு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இவா்களிடம் 5 நாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 10 மீனவா்களையும் விடுவிக்கக் கோரி கனிமொழி எம்பி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த 27ஆம் தேதி நேரில் சென்று வலியுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மீனவா்கள் 10 பேரும், அவா்களது விசைப்படகு, மீன்பிடி உபகரணங்களுடன் விடுவிக்கப்பட்டதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.