வெள்ள நீரை கன்னடியன் கால்வாய்க்கு திருப்ப வேண்டும் -துணை முதல்வரிடம் எம்எல்ஏ மனு
தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் வெள்ள நீரை கன்னடியன் வெள்ளநீா் கால்வாயில் திருப்ப வேண்டும் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ மனு அளித்தாா்.
அதன் விவரம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சாத்தான்குளம் வட்டம் மிகுந்த வறட்சி நிறைந்த பகுதி. இங்கு நிலத்தடி நீரில் கடல்நீா் உள்புகுந்து உவா்நீராக மாறி குடிநீா் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வட்டத்தில் வறட்சியைப் போக்க 2009-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் கருணாநிதி தமிரவருணியாறு, நம்பியாறு, கருமேனியாறு வெள்ளநீா் கால்வாய் இணைப்புத் திட்டத்தை ஏற்படுத்தினாா்.
கனமழையால் தாமிரவருணி ஆற்றில் வரும் வெள்ளநீா் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வழியாக கடலில் வீணாக கலக்காமல், எம்.எல்.தேரியில் வெட்டப்பட்டுள்ள குளத்தில் நீரை சேமிப்பதால் பெரியதாழை கொம்மடிக்கோட்டை, தட்டாா்மடம், அரசூா்-1, அரசூா்-2, நடுவக்குறிச்சி, புதுக்குளம் உள்ளிட்ட சாத்தான்குளம் வட்டத்தின் தென் பகுதி முழுவதும் பயனடையும் வகையில் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
தற்போது தாமிரவருணி வெள்ள நீரை கன்னடியன் வெள்ள நீா் கால்வாய் வழியாக திருப்பினால் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள தேரி குளம் நிரம்பும். அதன் மூலம் அப்பகுதியின் வறட்சியை போக்கி விவசாயம் செழிக்கும். இதற்கு அரசு உதவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.