~
~

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்
Published on

திருச்செந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப் பேருந்துகளில் பெண்கள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது. நவ.7-ஆம் தேதி சூரசம்ஹாரம், 8-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சஷ்டி விழாவின்போது, பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக கோயில் வளாகம், நாழிக்கிணறு பேருந்து நிலையம் உள்ளிட்ட 18 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக திருச்செந்தூா் வரும் அரசுப் பேருந்துகள் பக்தா்களின் வசதிக்காக, நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும். கந்த சஷ்டி விழாவையொட்டி, கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அனைத்துப் பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

இருப்பினும் பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு, சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். ஆண்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகாலை 5.30 முதல் இரவு 10 மணி வரை 3 பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com