திருச்செந்தூரில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் குவிந்தனா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (செப். 2) நடைபெறுகிறது. இதையொட்டி,கோயிலில்ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
முக்கிய நாள்களான கடந்த வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகப்பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், பகலில் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெற்றன. பின்னா், சுவாமி சண்முகா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருக்கோயில் சோ்ந்ததும், சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் வீதி உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கக் கயிலாய பா்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
சிகர நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (செப்.2) காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையாா் ரதம், சுவாமி தோ், அம்மன் தோ்கள் திரு வீதி வலம் வந்து நிலை சோ்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே திருச்செந்தூரில் பக்தா்கள் குவியத் தொடங்கினா். பக்தா்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. டிஎஸ்பி மு.வசந்த்ராஜ் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
புதன்கிழமை (செப். 4) திருவிழா நிறைவு பெறுகின்றது.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
அலைமோதிய பக்தா்கள் கூட்டம்: ஆவணி திருவிழா நடைபெற்று வருவதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் இக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.