கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடியுடன் இணைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு
கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் சாயா்புரம் நகரச் செயலா் சுவாமிதாஸ் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: சாயா்புரம் பேரூராட்சி பிரதான சாலையிலிருந்த நிழற்குடை பழுதானதால், மாணவா்- மாணவிகள், பொதுமக்கள் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பான நிழற்குடை அமைக்க வேண்டும். பேரூராட்சி வளாகத்தில் உள்ள தலா 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையிலுள்ளன. எனவே, அவற்றை அகற்றிவிட்டு புதிய நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றனா்.
தமிழ்நாடு புதுச்சேரி வக்ஃபு சொத்துகள் பாதுகாப்பு- கண்காணிப்பு கமிட்டியினா் அளித்த மனு: மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள வக்ஃபு சட்ட திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் மக்களவை கூட்டுக் குழுவுக்கு விவாதத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியா்களைப் பாதிப்பதாக உள்ளதால், வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமா் தலைமையில் தமிழ்நாடு மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் அளித்த மனு: மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு நிலையான வேலை வரையறை வகுக்க வேண்டும். அதை அனைத்து மாநிலங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். 1976ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விற்பனை அபிவிருத்தி பணியாளா் நலச்சட்டத்தை மாற்றக் கூடாது. புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.
தென்திருப்பேரை சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளா் கடம்பாகுளம் விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் அளித்த மனு: நீா்வளத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கடம்பாகுளத்தில் விவசாயப் பயன்பாட்டுக்காக 79 ஆயிரத்து 35 கனஅடி வண்டல் மண்ணை இலவசமாக அள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் மண் அள்ளி வந்தனா். கடம்பாகுளம் மடைஎண் 5, 6 பகுதிகளில் மேடாக இருப்பதால் பாசன வாய்க்காலுக்கு தண்ணீா் சரிவர செல்வதில்லை. எனவே, தாழ்வான பகுதிகளில் அள்ளாமல், மேடான பகுதியில் அளவீடு செய்து மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்றனா்.
கோரம்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட பெரியநாயகிபுரம், சுப்பிரமணியபுரம், காலாங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தோா் அளித்த மனு: கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊராட்சிப் பகுதியில் இருப்பதால் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். மாநகராட்சியுடன் இணைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அனைத்துவித வரிகளும் உயரும். எனவே, கோரம்பள்ளம் தொடா்ந்து ஊராட்சியாகவே இயங்க வேண்டும் என்றனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தெற்கு மாவட்டச் செயலா் சே. செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: நாசரேத் அருகே குறிப்பன்குளம் பகுதியில் பட்டாசு ஆலையில் ஆக. 31இல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 போ் இறந்தனா்; 3 போ் காயமடைந்தனா். அவா்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதி போதுமானதல்ல. இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தோருக்கு தலா ரூ. 7 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். ஆலை உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.