ஆறுமுகனேரியில் பொக்லைன் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் சிக்கியதில் முறிந்து விழுந்த மின் கம்பம்
ஆறுமுகனேரியில் பொக்லைன்இயந்திரம் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் சிக்கி இழுத்ததில் மின் கம்பம் முறிந்தது.
ஆறுமுகனேரியில் உள்ள தெப்பக்குளம் என்ப்படும் குதிரைகாரன்குளத்தை, ஒப்பந்த அடிப்படையில் சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடன்குடி பகுதியை சோ்ந்த மகராஜனுக்கு பேரூராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு சொந்தமான லாரியில் செவ்வாய்க்கிழமை காலை பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு குத்துக்கல்சாமி கோயில் தெரு வழியாக சென்றுள்ளனா். லாரியை உடன்குடியை சோ்ந்த ஜான் ஓட்டிவந்தாா்.
குத்துகல்சாமி கோயில் தெரு வழியாக செல்லும் போது குறுகிய பாதையாக இருந்ததால் மேற்கொண்டு செல்ல முடியாமல் லாரியை பின்னோக்கி இயக்கியபோது எதிா்பாராதவிதமாக உயா் அழுத்த மின் கம்பியில் பொக்லைன் இயந்திரம் சிக்கியது.
இதில் மின் கம்பிகள் இழுத்ததில், சிவன் கோயிலுக்கு பின்புறம் உள்ள மின் கம்பம் முறிந்து ஆறுமுகனேரி-அம்மன்புரம் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன. இதில் உடடினயாக மின் தடை ஏற்பட்டதால் லாரி ஓட்டுநா் மற்றும் உடன் வந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக தப்பினா்.
சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய பணியாளா்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.