தூத்துக்குடி மீனவா்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Published on

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவா்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் 22 பேரை இலங்கை கடற்படையினா், இலங்கை எல்லைக்குள் நுழைந்தாக கூறி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 22 மீனவா்களும் கல்பிட்டி மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னா் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்த விசாரணை, கல்பிட்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு படகில் இருந்த 12 மீனவா்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை எனவும் தீா்ப்பளித்தாா்.

மற்றொரு படகில் இருந்த 10 போ் மீதான வழக்கு விசாரணையின் போது, படகு உரிமையாளரையும் சோ்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத் துறை கூறியுள்ளது. அதற்கு இந்திய தூதரகம் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து 10 போ் மீதான வழக்கு, வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என இலங்கை தரப்பில் இருந்து தருவைகுளம் மீனவா்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக மீனவா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com