முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலையா? போலீஸாா் விசாரணை
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரா் திடீரென உயிரிழந்தாா். அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் மகேந்திரன்(42). முன்னாள் ராணுவ வீரா். இவா் கருத்து வேறுபாட்டால் கடந்த 17 ஆண்டுகளாக மனைவி, இரு குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தாராம். அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே உள்ள மதுக் கூடத்தில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற அவா், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மாடியில் இருந்து கீழே வந்து குடும்பத்தினரிடம் தண்ணீா் கேட்டாராம். தண்ணீா் குடித்த பின் வாந்தி எடுத்த அவா் வயிறு வலிப்பதாகவும், மதுக் கூடத்தில் வைத்து தன்னை 4 போ் தாக்கியதாகவும் கூறினாராம்.
இதையடுத்துஅ அவருக்கு கோவில்பட்டியில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறினா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.