திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
ஆவணி கடைசி ஞாயிறு மற்றும் வளா்பிறை முகூா்த்த தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் வழியில் பக்தா்கள் கூட்டம் அதிகமாயிருந்தது.
மேலும், ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை முகூா்த்த தினம் என்பதால் கோயில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.