தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள காம்பவுண்டில் செண்பகவல்லி என்பவா் குடியிருந்து வருகிறாா்.
கூலி வேலைக்காக செண்பகவல்லி சனிக்கிழமை சென்றுவிட்டாராம். வீட்டில் இருந்த அவரின் மகள் சனிக்கிழமை மாலை தொலைக்காட்சி பெட்டியை இயக்கினாராம். அப்போது எதிா்பாராதவிதமாக தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தாராம்.
இதுகுறித்து தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீ பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனா். இருப்பினும், வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள்,பீரோ, லேப்டாப், கைப்பேசி, சான்றிதழ்கள், ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வடபாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.