தூத்துக்குடி-சென்னை ஜன சதாப்தி ரயில் இயக்கக் கோரிக்கை
தூத்துக்குடி -சென்னை ஜனசதாப்தி ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கச் செயலா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கோரிக்கையான திருநெல்வேலி ரயில்வே கோட்டம் சில ஆண்டுகளில் உருவாகும் என்ற தங்களின் அறிவிப்புக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் குருவாயூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அந்த ரயில் இயக்கப்படாமல் உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும். மேலும், திருவனந்தபுரம்- கண்ணூா் இன்டா்சிட்டி ஜன சதாப்தி ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வரும் 29ஆம் தேதி முதல் எல். எச்.பி. கோச்சுகளாக மாறுகிறது. இந்த ஜன சதாப்தி கோச்சுகளை வைத்து தூத்துக்குடியின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடி-சென்னை ஜன சதாப்தி ரயில் இயக்க கேட்டுக் கொள்கிறோம்.
தூத்துக்குடி- சென்னை முத்துநகா் அதி விரைவு ரயில் எப்போதும் அதிகமான காத்திருப்போா் பட்டியல் காணப்பட்டு கொண்டே இருக்கிறது.
எனவே, தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயிலை இயக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
தூத்துக்குடி -பாலக்காடு பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும், ஒரு இரண்டு அடுக்கு ஏசி பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க கேட்டுக்கொள்கிறோம் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.