தூத்துக்குடியில் பாதியாக குறைந்த மீன் விலை: மீனவா்கள் கவலை
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை பாதியாக குறைந்ததால், மீனவா்கள் கவலையடைந்தனா்.
புரட்டாசி மாதம் என்பதாலும், ஏராளமானோா் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருப்பதாலும் மீன்களுக்கு விலை கிடைக்காது என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. ஆனால், மீன்கள் குறைந்த விலைக்கே ஏலம் போயின. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் கிலோ ரூ. 600-க்கும், ரூ. 500-க்கு விற்பனையான விளைமீன் ரு. 250-க்கும் என பாதியாக விலை குறைந்தன.
அதேபோல, ஊளி, பாறை மீன்கள் ரூ. 200, அயிலை ஒரு கூடை ரூ. ஆயிரம், சாளை ஒரு கூடை ரூ. 600 என விற்பனையாகின. மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலையடைந்தனா்.