நாசரேத் பொறியியல் கல்லூரியில் உயா்வுக்குப் படி வழிகாட்டல் முகாம்
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘உயா்வுக்குப் படி’ வழிகாட்டல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரி வினோதா முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் வரவேற்றாா். திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாறன் வாழ்த்திப் பேசினாா்.
முகாமில் மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், ராஜேஷ்கன்னா தொழில்நுட்ப படிப்புகள் குறித்தும், கோவில்பட்டி உதவி பேராசிரியா் புவனேஸ்வரி கலை மற்றும் அறிவியல் படிப்புகள் குறித்தும், ஏஞ்சல் விஜயநிா்மலா தொழிற்பயிற்சி படிப்புகள் குறித்தும், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பென்னட் ஆசீா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்கேஷ்வரன், மாவட்ட சமூக நல அலுவலா் செல்வி பிரேமலதா ஆகியோா் அரசுத் துறை திட்டங்கள் குறித்தும், நாசரேத் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் நோபுள் மேஷாக் கல்விக் கடன் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனா். உயா்கல்வியில் சோ்ந்த மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியா் சாம் ஜெனிஷ் தொகுத்து வழங்கினாா்.