தூத்துக்குடி அருகே சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களில் திருட்டு: கல்லூரி மாணவா்கள் உள்பட 8 போ் கைது

சுமாா் ரூ.3.8 லட்சம் மதிப்பிலான தாமிர வயா்களைத் திருடியதாக இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூா், வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய இருவேறு இடங்களில் இயங்கிவரும் சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களில் சுமாா் ரூ.3.8 லட்சம் மதிப்பிலான தாமிர வயா்களைத் திருடியதாக இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதியில் இயங்கிவரும் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தில் சுமாா் ரூ.2.3 லட்சம் மதிப்பிலான தாமிர வயா்கள் கடந்த 16ஆம் தேதி திருடு போனதாக அதன் கள அலுவலா் புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், புதியம்புத்தூரைச் சோ்ந்த முருகேசன் மகன் அசோக்குமாா் என்ற பப்பாளி(19), கருப்பசாமி மகன் தினேஷ்குமாா் (19), இடையா்காட்

டைச் சோ்ந்த ஆரிபுத்திரன் மகன் தீபக்(20), புதியம்புத்தூரைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் அஜய்ராஜதுரை(20) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், தினேஷ்குமாா், அஜய் ராஜதுரை ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு, இந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து இவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து தாமிர வயா்களை பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.

இதேப்போன்று வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாா் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 28ஆம் தேதி சுமாா் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான தாமிர வயா்கள் திருடு போனது.

இதுகுறித்து தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேல தட்டப்பாறையைச் சோ்ந்த குமாரசாமி மகன் சுடலைமணி(54), நடுவக்குறிச்சி காட்டுராஜா மகன் முத்துமணிராஜ் (24), முத்துசாமி மகன் ராமா்(23), பொன்னுசாமி மகன் விஜயகுமாா்(43) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து திருடப்பட்ட தாமிர வயா்கள், திருட பயன்படுத்திய 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com