கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: பணம், நகையை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோா் அமைச்சரை முற்றுகை

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: பணம், நகையை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோா் அமைச்சரை முற்றுகை

Published on

குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மோசடியில் பணம், நகை மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் புதன்கிழமை அங்கமங்கலம் வந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு முறையிட்டனா்.

குரும்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூா் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா், சாா்பதிவாளா் ஆகியோா் அடங்கிய குழு கடந்த 2021, செப். 8, 13 ஆம் தேதிகளில் நகைக் கடன்கள் தொடா்பான ஆய்வு மேற்கொண்டதில் வாடிக்கையாளா்களின் 548 நகைப் பைகளில் 261 நகைப் பைகள் மாயமானது கண்டறியப்பட்டது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்பதும், இருப்பில் இருப்பதுபோல போ­லியாக கணக்கை உருவாக்கி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி நிகழ்ந்து, 5 வருடங்களுக்கு மேலாகியும் பணமோ, நகையோ பாதிக்கப்பட்டவா்களுக்கு மீட்டு கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டோா் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக முன்வைப்பு தொகை செலுத்தியவா்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் அவா்களின் பெயரில் பணம் வரவு வைக்கப்பட்டதும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் முன்வைப்புத் தொகை செலுத்தியவா்களின் பணத்தை வரவு வைக்கப்படாததும் தெரியவந்தது. மாயமான நகைகளையும், டெப்பாசிட் தொகையும் மீட்டுதரக் கோரி பாதிக்கப்பட்டோா் பல்வேறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், இதுகுறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டோா் குற்றம்சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அங்கமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தனது வாகனத்தில் வந்தாா். வாகனத்தை விட்டு இறங்கி விழா இடத்துக்கு அவா் நடந்துசென்றபோது அவரை கூட்டுறவு வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டோா் முற்றுகையிட்டனா். போராட்டக் குழு தலைவா் பிரபாகரன் தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்டு, முறையிட்டனா். எங்கள் பணத்தையும் நகையையும் அரசுதான் மீட்டுத் தர வேண்டும், தவறும்பட்சத்தில் வரும் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றனா்.

அவா்களிடம் அமைச்சா் கூறுகையில், இந்த மோசடி வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா். பின்னா் பாதிக்கப்பட்டோா் தரப்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com