மணிமுத்தாறு 4 வது ரீச் கால்வாய் வழி சாத்தான் வட்ட குளங்களுக்கு நீா் திறக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

Published on

மணிமுத்தாறு 4ஆவது ரீச் கால்வாயில் கொம்பன் குளம், புதுக்குளம் ஆகிய 2 குளங்களுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, வெள்ளநீா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் பல்வேறு குளங்களை சென்றடைந்துள்ள நிலையில் சாத்தான்குளம் வட்டம் கொம்பன் குளம், புதுக்குளம், ஆலங்கிணறு குளம் உள்ளிட்ட குளங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இந்தக் குளங்களுக்கு தண்ணீா் எப்போது வரும் என விவசாயிகள் எதிா்பாா்த்து உள்ளனா்.

ஆதலால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடைமடை விவசாயிகளின் நலம் கருதி, வெள்ளநீா் கால்வாயில் உள்ள மணிமுத்தாறு 4ஆவது ரீச் கால்வாய் வழியாக கொம்பன் குளம், புதுக்குளம், ஆலங்கிணறு குளம் உள்ளிட்ட குளங்களுக்கு உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலருமான எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா், புதுக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் ச. பாலமேனன் ஆகியோா் கூட்டாக வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com