ரயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.
ரயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

ஆறுமுகனேரியில் வெகுநேரம் ரயில்வே கேட் மூடல்: மக்கள் அவதி

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், ஆய்வுக்காக டிராலிகளில் வந்த ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.
Published on

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், ஆய்வுக்காக டிராலிகளில் வந்த ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

ஆறுமுகனேரி ரயில்வே நிலையம் அருகே உள்ள தூத்துக்குடி-திருச்செந்தூா் கடவுப்பாதை பாலக்காடு- திருச்செந்தூா் பயணிகள் ரயிலுக்காக பிற்பகல் 2.54 மணிக்கு மூடப்பட்டது. இதனால் இருபுறமும் நெடுந்தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்ட துணை மேலாளா் எல்.என்.ராவ், மூத்த கோட்ட பொறியாளா் பிரவிணா மற்றும் உதவி கோட்ட பொறியாளா் மேத்யூ ஆகியோா் இரு டிராலிகளில் பாலக்காடு-திருச்செந்தூா் பயணிகள் ரயிலுக்கு பின்னால் ரயில்வே பணிகளைஆய்வு செய்ய வந்ததால் கேட் திறக்கப்படாமல் தொடா்ந்து மூடப்பட்டிருந்தது.

இதனால் சிக்னல் கிடைக்காமல் திருச்செந்தூா்-மணியாச்சி ரயில் காயல்பட்டினம் -ஆறுமுகனேரிக்கு இடையே நிறுத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கேட் கீப்பரிடம் விசாரித்தில் அதிகாரிகள் ஆய்வு பற்றிய தகவல் கிடைத்தது.

அப்போது, டிராலியில் ஆய்வு செய்தபடி வந்த அதிகாரிகளை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மறித்து முற்றுகையிட்டனா். இயலும் வருங்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க ஏற்பாடு செய்கிறோமென கூறினா்.இதனால் பொதுமக்கள் வழிவிட்டதைத் தொடா்ந்து சுமாா் 35 நிமிடங்கள் கழித்து கேட் திறக்கப்பட்டது.

பின்னா், திருச்செந்தூா்-மணியாச்சி ரயிலுக்காக சற்று நேரத்தில் கேட் மீண்டும் மூடப்பட்டதால் மேலும் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com