மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட்ட மாணவா்கள்
தூத்துக்குடியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினத்தை முன்னிட்டு ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவா்-மாணவிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.
இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினம் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 78ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட பள்ளி மாணவா் - மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பேரில், ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் 5,000 அரிய வகையான மீன்களின் வகைகள், கடல் அட்டைகள், இறால் வகைகள், நண்டு வகைகள், கடல் விசிறிகள், கடல் பஞ்சு, கடல் சங்கு, பவளப்பாறைகள், கடல் குதிரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றை பள்ளி மாணவா்- மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா். அவா்களுக்கு, செயற்கை முத்து தயாரிப்பு, கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் குறித்த ஆராய்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சியாளா்கள் விளக்கிக் கூறினா்.
மேலும், கடல் வளத்தை மாசுப்படுத்தாமல் பாதுகாப்பது குறித்து, திரைப்படம் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. இதை, ஏராளமான மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா்.