பரமன்குறிச்சி பஜாரில் வேகத் தடை அமைக்க வேண்டும்
அடிக்கடி விபத்துகள் நேரிடும் பரமன்குறிச்சி பஜாரில் மூன்றடுக்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அமைச்சா், அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருசெந்தூா் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆகியோரிடம், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் நேரில் அளித்த மனு:
உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி ஊராட்சியில் சுமாா் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். தினமும் காலை, மாலையில் பரமன்குறிச்சி பஜாா் வழியாக இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்து, வாகனங்கள் பயணிக்கின்றன.
இதனால் பரமன்குறிச்சி பஜாா் தினமும் வாகன நெரிசல் காணப்படும்.மேலும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளப் பணி, உடன்குடி அனல்மின் நிலையப் பணி, தூண்டில் வளைவு அமைக்கப் பணிகளுக்காக ஏராளமான கனரக வாகனங்கள் இப்பகுதி வழியாக சென்று வருகின்றன.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு பலா் காயமடைகின்றனா்.பேரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக பஜாா் பகுதியில் மூன்றடுக்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.