பொங்கல் பண்டிகை: மண்பானை, அடுப்புகள் விற்பனை தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,தூத்துக்குடி மாநகரில் மண்பானை, மண் அடுப்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்காக, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், செய்துங்கநல்லூா் ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பல வண்ணங்களிலான மண்பாண்டங்களை மாநகா் பகுதிகளில் விற்பனைக்காக குவித்துள்ளனா். இதில், டிசைன் செய்யப்பட்ட மண்பானைகள் சுமாா் ரூ.500 வரை விற்பனையாகிறது. மற்ற பானைகள் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. மண் அடுப்புகள் ரூ. 250 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.
இதேபோன்று பொங்கல் அடுப்புக்கு எரிபொருளாக பனை ஓலை, காய்ந்த குச்சிகள் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதற்காக பனை ஓலைகள், காய்ந்த குச்சிகள் மாநகரின் முக்கிய சந்திப்புகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஒரு பனை ஓலை ரூ.30க்கு விற்பனையாகிறது. பொங்கல் தினத்தில் இதன் விலை ரூ.50 வரை உயரும் என விற்பனையாளா்கள் தெரிவித்தனா். அதேபோன்று காய்ந்த குச்சிகள் கட்டு ரூ.60க்கு விற்பனையாகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேவையான பொருள்களை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.