சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை இடம் 1010 ஏக்கா் மீட்கப்பட்டு ஏலம் எடுத்தவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட 1010 ஏக்கா் இடம், சாத்தான்குளம் அடுத்த நெல்லை மாவட்டம் திருமலாபுரம் காடங்குளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த இடங்களை தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் மற்றும் சுற்றுச்சுவா் கட்டி, மானாவாரி பயிா்கள் செய்து வந்தனா்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் காவல்துறையினா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு, அந்த இடங்கள் ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்தவா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஏகாந்தலிங்க சுவாமி கோயில் பேஸ்காா் முத்துராஜ் மற்றும் போலீஸாா் உடன் இருந்தனா்.