தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3 ஆவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப்படகுகளை சிறை பிடித்தது தொடா்பாக 11 விசைப்படகுகள், அதிலுள்ள மீனவா்கள் மீது மீன்வளத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை திரும்பப் பெறவேண்டும், ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27ஆம் தேதி முதல் விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து, மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து 3ஆவது நாளாக இப்போராட்டம் தொடா்கிறது. இதனால், பல கோடி ரூபாய் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.