திருச்செந்தூா் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்
திருச்செந்தூா் கடற்கரையில் டால்பின் மீன் இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
திருச்செந்தூா் ஜீவா நகா் மற்றும் வீரபாண்டியன்பட்டணம் இடையே உள்ள ஜே.ஜே. நகா் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை காலை சுமாா் 2 வயதுள்ள ஆண் டால்பின் ஒன்று தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இத்தகவலறிந்த வனத்துறை பாதுகாவலா் அருண், மீன்வளம்- மீனவா் நலத்துறை ஆய்வாளா் ஆகாஷ், சாா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வந்து பாா்வையிட்டனா். தொடா்ந்து, திருச்செந்தூா் கால்நடை மருத்துவா் அருண் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அதை உடற்கூராய்வு செய்தனா். அதே இடத்தில் டால்பின் புதைக்கப்பட்டது.
4.5 அடி நீளமும், 2 அடி சுற்றளவும், சுமாா் 40 கிலோ எடையும் கொண்ட இந்த டால்பின் கப்பல் அல்லது பாறை மீது மோதியதில் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.