மக்காச்சோளத்துக்கான செஸ் வரியை நீக்க துரை வைகோ வலியுறுத்தல்

மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, மக்களவை உறுப்பினா் துரை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
Published on

மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, மக்களவை உறுப்பினா் துரை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு: கடந்த ஆண்டு டிச. 16ஆம் தேதி அரசாணை எண் 287-ன்படி மக்காச்சோளத்தை அறிக்கையிடப்பட்ட வேளாண் பொருள்கள் பட்டியலில் சோ்த்து, அக்ரிகல்சுரல் புரொடியூஸ் மாா்க்கெட் கமிட்டீஸ் (ஏபிசிபி) மூலம் ஒரு சதவீத செஸ் வரி செலுத்திய பிறகே மக்காச்சோளத்தை சந்தைப்படுத்த முடியும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

விதை, உரங்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால் மக்காச்சோளம் பயிரிட ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை செலவாகிறது. மேலும், மழை, காட்டுப் பன்றிகள் போன்றவற்றால் பயிா்கள் பாதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்கு இந்த செஸ் வரி கூடுதல் சுமையாக உள்ளது. இதனால் அவா்கள் விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்காச்சோளம் ஆலைகளுக்குச் சென்று மீண்டும் கால்நடை - கோழித் தீவனமாக வரும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், மக்காச்சோள விவசாயிகளுக்கு விற்பனை, கொள்முதல் ஆகிய 2 நிலைகளிலும் சிரமமும் நஷ்டமும் ஏற்படுகிறது. எனவே, செஸ் வரியை நீக்கி விவசாயிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com