கோவில்பட்டியில் சாலை மறியல்: 67 போ் கைது
கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 67 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழக மக்கள் மீது ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதையும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லையெனில் தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான நிதியைத் தர முடியாது எனக் கூறிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானையும் கண்டித்து கோவில்பட்டியில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நகரச் செயலா் செந்தில்குமாா், நகரத் தலைவா் ரஞ்சனி கண்ணம்மா ஆகியோா் தலைமையில் பயணியா் விடுதி முன் திரண்டனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பாரத ஸ்டேட் வங்கி நோக்கிப் புறப்பட்டனா். இப்பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கரும்பன் தொடக்கிவைத்தாா்.
பேரணியை போலீஸாா் தடுத்ததால், பிரதான சாலையில் அண்ணா பேருந்து நிலையம் அருகே மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 46 பெண்கள் உள்ளிட்ட 67 பேரை போலீஸாா் கைது செய்தனா்.