திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து வேறு வழித்தடத்துக்கு மாற்றம்: பொதுமக்கள் அவதி
திருநெல்வேலியிலிருந்து நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து திடீரென வேறு வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
திருநெல்வேலியில் இருந்து செய்துங்கநல்லூா், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பேருந்து தடம் எண். 137 சி இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் இந்தப் பேருந்து மாலை 3:50 மணிக்கு இயக்கப்பட்ட நேரத்தை குறைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன்குடி செல்ல வழித்தடத்துக்கு மாற்றியுள்ளனா். இதனால் இந்த பேருந்து மற்ற நேரங்களில் சாத்தான்குளத்திற்கும், ஒரு மாதமாக மாலை உடன்குடிக்கும் சென்று வருகிறது. மாலை இந்த பேருந்தை எதிா்பாா்த்து உள்ள பொதுமக்கள் பேருந்து வராததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனா். போக்குவரத்து கழக அதிகாரிகள் மீண்டும் அதே வழித்தடத்தில் இந்தப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், மாணவா், மாணவிகள் வலியுறுத்தியுள்ளனா்.
