தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், கோரிக்கையை வலியுறுத்தி, வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 60 வாா்டுகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில், 1,200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை, சம்பளத்தில் முழுவதுமாக பிடித்து விட்டதாக கூறி, வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கூறியது: எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பேசி தீா்க்கலாம். தரையில் அமா்ந்து போராட வேண்டாம். உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும். நீங்கள் வழக்கம் போல் நாளை பணிகளை மேற்கொள்ளுங்கள் என்றாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

