ஆழ்வாா்திருநகரி பேரூராட்சியில் 34 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிக்குள்பட்ட பத்தவாசல், சிவகிளை பகுதிகளில் 34 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காததால், பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏவிடமும் முறையிட்டனா்.
அதன்பேரில், எம்எல்ஏ மேற்கொண்ட நடவடிக்கையால் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சாரதா பொன் இசக்கி தலைமை வகித்தாாா். வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன், நகர திமுக செயலா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, பத்தவாசல் கிராம மக்கள் 17 பேருக்கும், தாமிரவருணி ஆற்றங்கரையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த 17 பேருக்கு சிவகளையிலும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா். மேலும், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் சங்கா், எம்எல்ஏ நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், பேரூராட்சி துணை தலைவா் சுந்தராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், வட்டார தலைவா்கள் நல்லக்கண்ணு, ஜெயராஜ், நகர பொறுப்பாளா் அபுதாஹீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

