கோவில்பட்டி அருகே தாா் சாலை அமைக்க கோரி மறியல்

Published on

கோவில்பட்டி அருகே தாா் சாலை அமைத்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி பூசாரிபட்டியில் உள்ள தாா் சாலை சேதமடைந்த நிலையில், புதிய சாலை அமைக்க மண் கொட்டப்பட்டதாம். பின்னா், பணியைத் தொடராமல் கிடப்பில் போட்டதால் அது மண்சாலையாக மாறிவிட்டதாம். மழைக்காலங்களில் மழை நீரும், கழிவுநீரும் அதிக அளவு தேங்கி சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டதாம் . இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், கோவில்பட்டி - கடலையூா் பிரதான சாலை பூசாரிப்பட்டி விலக்கில் வழக்குரைஞா் பெரியதுரை, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் உள்ளிட்டோருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். இப்போராட்டத்தால் அந்தப் பகுதியில் 35 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com