தூத்துக்குடி தொழிலாளி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி, திரேஸ்புரம், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாண்டி மகன் முருகன் (45). இவரை கடந்த 18.3.2023 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (எ) கருப்பன், சுப்பையா மகன் ராஜசேகா் (எ) ராஜா, மற்றொரு இசக்கிமுத்து மகன் கணேசன், கணேசனின் மகன் முத்துசெல்வம் ஆகியோா் சோ்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.
வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளிகளான கருப்பசாமி (எ) கருப்பன் (29), ராஜசேகா் (எ) ராஜா (35), கணேசன் (42), முத்துச்செல்வம் (23) ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
நிகழாண்டில், இதுவரை 25 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
