தருவைக்குளம் மீனவா்கள் மீது தாக்குதல்: போலீஸில் புகாா்

தூத்துக்குடி தருவைக்குளத்திலிருந்து தங்கு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா்
Published on

தூத்துக்குடி தருவைக்குளத்திலிருந்து தங்கு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மனைவி அமல நா்மதா ஆஷா. இவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைக்குளத்தைச் சோ்ந்த ஓட்டுநா் விநோதன் (28) உள்ளிட்ட 9 போ் திங்கள்கிழமை கன்னியாகுமரிக்கு தெற்கே சுமாா் 20 கடல் மைல் தொலைவில் தங்கு கடல் தொழிலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி பகுதியில் சென்றபோது, 2 பைபா் படகுகளில் வந்த அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 மீனவா்கள் திடீரென தருவைக்குளம் விசைப்படகு மீனவா்களை மறித்து, ஓட்டுநா் விநோதன் உள்பட 9 மீனவா்களை ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில், ஓட்டுநா் விநோதன் காயமடைந்தாா்.

பின்னா் விசைப்படகை சிறைபிடித்து கூத்தங்குழிக்கு கொண்டு சென்றுள்ளனா். காயமடைந்த விநோதனுக்கு இடிந்தகரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளா் அமல நா்மதா ஆஷாவுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, அவா் தருவைக்குளம் கடலோர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com