கூட்டம் நடத்தும் விஜய் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: ராஜேஷ்குமாா் எம்எல்ஏ
கட்சி தொடங்கி கூட்டம் நடத்தும் விஜய், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம் எனும் பெயரில் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி 1-ஆம் கேட் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் ராஜேஷ் குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடின்டா, மண்டலத் தலைவா்கள் சேகா், ராஜன், ஐசன் சில்வா, செந்தூா்பாண்டி, ஐ.என்.டி.யு.சி மாநிலச் செயலா் ராஜ், வழக்குரைஞா் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் பா்னபாஸ், ஐ.என்.டி.யு.சி மாநில செயற்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், ஜான்பிரிட்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் ராஜேஷ் குமாா் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியது:
தோ்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு கோடி பேரிடமும், நாடு முழுவதும் 5 கோடி பேரிடமும் கையொப்பம் பெறப்பட்டு அக். 15-ஆம் தேதி ஜனாதிபதியிடம் அளிக்கப்படும்.
மனிதநேய அடிப்படையில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி த.வெ.க. தலைவா் விஜயுடன் பேசினாா்.
கரூா் சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அது தொடா்பாக எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. கட்சி தொடங்கியிருக்கும் நடிகா் விஜய், கூட்டம் நடத்தும்போது அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அதுதான் தலைமைத்துவ பண்பு. ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் இறந்தால், கட்சி கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்; அதைக்கூட அவா்களால் செய்ய முடியவில்லை. கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகள் பெறுவது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்றாா் அவா்.

