முதல்வா் கோப்பை மாநில ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டியில் தொடக்கம்

கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை மாநில ஹாக்கிப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.
Published on

கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை மாநில ஹாக்கிப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதிப் போட்டிகள் வரை நாக்அவுட் முறையிலும், பின்னா் லீக் முறையில் அரையிறுதிப் போட்டிகளும் நடைபெறும்.

அரையிறுதிப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெறும் முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முதல் நாளான புதன்கிழமை நடைபெற்ற போட்டியை உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ்ராம் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை மண்டல முதுநிலை மேலாளா் ராஜா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு ஹாக்கி பயிற்சியாளா் முகமது ரியாஸ், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் ஜெயரத்தின ராஜன், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, ஹாக்கி வீரா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல் போட்டியில் சேலம் மாவட்ட அணியும், விருதுநகா் மாவட்ட அணியும் மோதியதில் 2-0 என்ற கோல்கணக்கில் சேலம், 2ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா், கன்னியாகுமரி மோதியதில் 5-1 என்ற கோல்கணக்கில் தஞ்சாவூா், 3ஆவது ஆட்டத்தில் கிருஷ்ணகிரி, அரியலூா் மோதியதில் 8-0 என்ற கோல்கணக்கில் கிருஷ்ணகிரி, 4ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல், நாகப்பட்டினம் மோதியதில் 12-0 என்ற கோல்கணக்கில் திண்டுக்கல், 5ஆவது ஆட்டத்தில் ராமநாதபுரம், திருவண்ணாமலை மோதியதில் 5-1 என்ற கோல்கணக்கில் ராமநாதபுரம் அணியும் வெற்றி பெற்றன.

6ஆவது ஆட்டத்தில் கடலூா், நாமக்கல் மோதியதில் 6-2 என்ற கோல்கணக்கில் கடலூா், 7ஆவது ஆட்டத்தில் செங்கல்பட்டு, திருப்பூா் மோதியதில் 2-1 என்ற கோல்கணக்கில் செங்கல்பட்டு, 8ஆவது ஆட்டத்தில் ஈரோடு, திருநெல்வேலி மோதியதில் 3-0 என்ற கோல்கணக்கில் ஈரோடு, 9ஆவது ஆட்டத்தில் சென்னை, தென்காசி மோதியதில் 4-0 என்ற கோல்கணக்கில் சென்னை, 10ஆவது ஆட்டத்தில் மதுரை, நீலகிரி மோதியதில் 10-1 என்ற கோல்கணக்கில் மதுரை அணியும் வெற்றி பெற்றன.

X
Dinamani
www.dinamani.com